ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

I'm Also Baby

             நானும் ஓர் குழந்தை  



கற்பனையில் மட்டும் கிடைத்த காதல் எனும் உணர்வை பெற கட்டியவள் என்றொருத்தி வந்தாள். கட்டிலறை இன்பம்  கண்டு காதலில் திளைக்கும் கற்பனை மீறிய உணர்வில் மிதந்து கொண்டிருக்கும் வேளையில் கடவுள் வரம் தந்ததாய் உணர்ந்த ஓர் நிகழ்வை பற்றிய தொகுப்பு 


வேலை முடிந்து வரும் வேளையில் என்னவள் எனை பார்த்து வெட்கம் எனும் பூக்களை உதிர்த்தாள். முதன் முதலாக அவளை பார்த்த பொது அவள் பெற்ற வெட்கத்தைவிட மிகவும் அழகாகவும், ஆழமாகவும் இருந்தது. அவள் கண்ணே ஆயிரம் கதை சொல்ல அன்பானவளை பார்த்து என்ன என்பதை போல தலையாட்டினேன். கையில் ஏதோ மறைத்தவளாய் என் அருகில் வந்தவள்... "மாமா, உன்னை புது உறவு கூறி அழைக்க மகிழ்வான ஓர் உறவு வருகிறது" என்றாள். புரிந்தும் புரியாதவனுமாக அவளையே பார்த்து நின்றேன் 

 

கண்மணி கையில் இருந்த Pregnancy Test Kit ல் இருந்த 2 கோட்டினை நான் கண்டவுடன்.. சிறகு இல்லாத பறவையை போல் சிறகடிக்க முயன்றேன். என்னுடைய உயிரானவள் வயிற்றில் எனக்கான உயிர் வளர்வதை எண்ணி எண்ணற்ற எண்ணம் கொண்டேன். மகிழ்வை தவிர மனதில் வேறொன்றும் இல்லை.


இமயம் எட்டிப்பிடித்த சாதனை புரிந்த உணர்வு, என்னைப் பார்த்து ஆனந்த கண்ணீருடன் நின்ற என் மூத்த பிள்ளையை தழுவி தலையில் முத்தமிட்டு கர்ப்பமாக இருப்பது நீயல்ல நாம் என்று கூறினேன்.


     

என் குழந்தையின் தாயை என்னுடைய தாயை போல கவனித்து காலங்களை கடந்து என் பிள்ளை வரவிற்காக காத்திருந்தேன். காலையில் நடைப்பயிற்சி, மாலையில் வெந்நீர் ஒத்தடம் என மணந்தவளுக்கு மெல்ல மெல்ல பிரசவ வலியை தாங்கும் தைரியம் கொடுத்தேன். 



அவள் உறங்க என் உறக்கம் தொலைத்து அவள் முகம்காணும் மகிழ்வை தினமும் அனுபவித்தேன்.சிலநேரம் என்பிள்ளை உதைப்பதாக கூறி எனை தொட்டு பார்க்க சொல்லும் அந்த நொடி கற்பனையில் கூட காணாத இன்பம் அதை கூற உண்மையில் வார்த்தை ஒன்று உலகில் இல்லை.


பத்து மாதம் என் கண்ணில் சுமந்தவளை கதறும் நிலை காணும் பொழுது கடவுளே உனக்கு மனதில்லையா எனும் கேள்வி மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் எழுந்தது. பெண்கள் மட்டும் இந்த வலியை பெற வேண்டுமா?, நானும் ஏற்கிறேன் என் உயிரின் வலியை என்று இயற்கையை மீறி யோசித்தேன்.



கட்டியவள் கதறும் ஒலிகேட்டு மருத்துவமனை வெளியில் நின்று நான், இனி கட்டிலறை சுகம் கூட வேண்டாம் கடவுளே என் உயிரானவள் உடல் துடிக்காமல் பார்த்துகொள்ளடா என்று வேண்டினேன். குழந்தை பிறந்த ஒலி கேட்டு மனம் கொண்ட நிம்மதி யாரும் அறியா ஒன்று. மகனோ, மகளோ காண தோணவில்லை எனக்கு... காரணம் உள்ளே உள்ள என் மூத்த பிள்ளையை பார்க்கவே என் மனம் ஏங்கியது. " தாயும் சேயும் நலம்" என செவிலியர் சொன்ன வார்த்தையே என் உள்ளம் பெற்ற உயிர் வலியை குறைக்க  மருந்தாய் அமைந்தது.




கடவுள் தந்த வரமாய் வந்த என் பிள்ளையை என் முன்னே கொண்டு வந்த போது 200 கிலோ தூக்கும் என்னால் 2 கிலோ என் பிள்ளையை தூக்க மனத் தைரியம் இன்றி துடித்தேன். அந்த பிள்ளைதனை கையில் சுமந்து பிஞ்சு விரல்  என் நெஞ்சை தொடும் பொழுது.......

 "நானும் ஓர் குழந்தை' எனும் எண்ணம் என் மனதை நிறைத்தது.






                                                                                                   -கவிநேயன் 



The Title Is At The End

                 தலைப்பு கடைசியில்

காலையில் குறட்டை விட்டு தூங்கும் என்னை குழந்தை போல சிணுங்கி எழுப்பிவிடுகிறான். அவனுடன் இருக்கும் பொழுது அனைவருடனும் இருப்பதாய் தோன்றும்.


காலையில் எழும்போது என் கைகள் அவனை தேடி அவனுடன் இணையும் அவன் முகம் பார்த்தே என் காலை பொழுது விடியும். அவனை கண்டுகொண்டே என்னுடைய நாளும் முடியும்.


செறுப்பை மறந்த நாட்களும் உண்டு. எனது சிறப்பானவனை உடன் அழைக்க மறந்த நாட்களே  இல்லை.  அவன் கண்ணில் காணும் போது மட்டும் நான் என்றும் அழகாகவே தெரிந்திடுவேன்.


அவன் முகம் என்னை பல முறை  முகமலர செய்துள்ளது. என்னுடைய அழுகை அனைத்தும் அறிந்தவன் அவன். அதற்கு ஆறுதலும் சில நேரம் தந்திருக்கிறான். 


உலகமே தூரமாய் இருந்தாலும் என்னருகே அவன் இருந்தால் போதும் என்று தோன்றும். என்னுடைய ரகசியங்கள்  அனைத்தும் அறிந்த நம்பிக்கை நாயகன். 


தனிமையில், இனிமையில், வெறுமையில் என்று அனைத்திலும் உடன் இருக்கும் உண்மையான தோழன். காதலரை இணைக்கும் சந்தானம் போன்ற நண்பன்.


சில நேரம் பாதுகாப்பும், சில நேரம் பாதகமும்  செய்வான். எனக்காக தினமும் செத்து பிழைக்கும் சேவகன். ஒருவகையில்  அவனும் எனக்கு காதலன். என் அன்பு நண்பன்  "தொலைபேசி "






                                                                                     -கவிநேயன்.
 
                                                              

சனி, 15 ஆகஸ்ட், 2020

Back to School

      பள்ளி செல்ல மனம் ஏங்குதே... 



கூலி தொழில் செய்பவர் முதல் Google இன் முதலாளி வரை அனைவர்க்கும் இருக்கும் பொதுவான ஆசைகளில் ஒன்று நான்  மீண்டும் அந்த பள்ளி வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே 
அப்படிப்பட்ட ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த தொகுப்பு 




நமக்கு சிறிதேனும் அடிபட்டாலும் கலங்கிப்போகும் அம்மா திங்கள்கிழமை காலையில் வயிற்றுவலி என்றதும் பொய் என்று கண்டுபிடித்து கண்டித்து அனுப்பும் அதிசயம் நிகழ்ந்த நாட்கள் அது.


நாம் எழுதாத வீட்டுப்பாடத்தை நண்பன் எழுதிவிட்டான் என்றதும் வரும் கோபத்தை அடக்க ஆயிரம் அன்னை தெரசா வந்தாலும் முடியாது 



ஒருவனின் கை மரபலகையில் தாளம் போட மற்றொருவன் கைகள் தட்ட மேசை மீது ஏறி ஆட்டம் போட்டதும் பின்பு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு முட்டி போட்டதும் மறக்க முடியாதவை 


தாய்க்காக கூட மருத்துவமனை செல்லாத நாம் நண்பனுக்கு பட்ட அடிக்காக நாமும் மருத்துவமனை சென்று வகுப்பை கட்டடிக்க போட்ட திட்டங்கள் ராணுவ தளவாடங்களில் கூட பதிவில் இல்லாத மிக சிறந்த திட்டமாகும் 





மாலைநேர மரத்தடி  வகுப்பறைகள் தரும் சுகத்தையும் நிம்மதியையும் இப்போதெல்லாம் நாம் செல்லும் Park, Beach போன்றவை கூட தருவதில்லை 


பள்ளி முடிந்ததும் எடுக்கும் ஓட்டம்.. "இன்னைக்கு வரைக்கும் போலீஸ் ட்ரைனிங்ல் கூட யாரும் ஓடுனதுள்ளடா, அப்படி ஒரு ஓட்டம்" எனும் வடிவேலு நகைச்சுவையை நியாபகப்படுத்துகிறது.



காலை எழுந்ததும் புறப்பட தயங்கிய  மனம், நண்பனுக்கு காத்திருந்து பூத்திருந்த விழிகள், பள்ளி வாசல் கண்டதும் வேகமென நடை எடுக்கும் கால்கள், பார்த்து எழுதி மாட்டிக்கொண்டு அடிவாங்கி பழுத்துப்போன முதுகு, உடம்பு சரியில்லை என்பதை காட்ட நாம் செய்யும் முகபாவம்,  கடைசி மணி ஓசை கேட்க காத்திருக்கும் காதுகள் என எல்லாம் பள்ளியின் இனிமையான நாட்களின்  நியாபகம் சொல்கிறது 


மேலும் 1 ரூபாய் தின்பண்டம் வாங்கி ஊர்க்கே பங்கு வைக்கும் நண்பன், ஓயாமல் என்னிடம் வம்பு வைக்கும் இன்னொரு எதிரி எனும் நண்பன், எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் செய்யும் காலை நேர பிராத்தனை கூட்டம், அங்கே நடக்கும் சிறு சிறு குறும்புகள்


நம்மை மட்டுமே முறைப்பது போல தோன்றும் தலைமை ஆசிரியரின் முகம், தமிழ் வகுப்பு நேர தூக்கம், ஆங்கில வகுப்பில் வரும் வேற்றுகிரக  வாசியின் எண்ணம், கணித வாத்தியார் மீது வரும் பயம், அறிவியல் என்றாலே பயம், சமூகம் அறியா  வயதில் படித்த சமூக அறிவியல், போலீஸ்க்கும் மேல பயம் தந்த P.E.T வாத்தியாரின் பாவனை என நீள்கிறது நினைவின் பட்டியல்...





வளர்ந்த பின் வாழ்க்கை தரும் ஏக்கம், சமூகத்தின் அடி தரும் வலி இவ்வளவு  கஷ்டமாக இருக்கும் என்று முன்பே அறிந்திருந்தால் மணியடித்த பின்பும் நாங்கள் பள்ளி எனும் சொர்க்கமே உன்னை விட்டு பிரிந்திருக்க மாட்டோம்.






                                                                                                    -கவிநேயன் 















  

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

Don't Be Lonely

          தனிமை வேண்டாம் 

   

 நம்மில்  பலருக்கு  தனிமை என்பது சொர்க்கமாகவும் , வரமாகவும்  தோன்றலாம் . இவ்வளவு  ஏன்  100 பேர்   இருக்கும் இடத்தில்  தனிமை யாருக்கெல்லாம் பிடிக்கும்  என்று கேட்டால் 95 பேர்  கை  உயர்த்துவர். உண்மையில் தனிமை  நல்லது தானா ? என்ற  கேள்விக்கு பதிலே  இந்த  தொகுப்பு



   உண்மையில் உங்களுக்கு தனிமை மட்டுமே பிடிக்கும் என்றால் நீங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளீர்கள்.இது உங்களை அறியாமலே நடந்து வருகிறது. உங்களை அழித்தும் வருகிறது . முதலில் தனிமையின்  காரணத்தை கண்டுகொள்வோம் 


தனிமையின்  காரணம் :

     இன்றைய வாழ்வில் பலரும் மகிழ்வாக இருப்பதை போல நடிக்கிறார்கள். உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் யாரும் Facebookஇல் அழகில்லாத Photoவை போடுவதில்லை அழும் போது  கூட அழகாய்  இருக்கவே ஆசைபடுகிறோம். பொய்யான இன்பத்தை தேடி மட்டுமே அலைகின்றோம். 


      இதுவே நம்மை பலவிதத்தில் எதிர்பார்ப்பை தூண்டி ஏமாற்றத்தை தருகிறது. 

இப்பொழுது தனிமைக்கான தீர்வை காணலாம்:



       தனிமை என்பதன் உண்மை பொருள் துணை இல்லாமை. இதிலே நமக்கு விடை கிடைத்து விட்டது. பலரும் இந்த நிலைய அடைய காரணம் ஒரு வரியே

                     " எவ்வளவு  முறை தான்  நானே விட்டு கொடுப்பது "

இந்த எண்ணம் நம் மனதில் வராத வரையில் நாம்  என்றும் தனிமை என்னும் இருளை தேட தேவையில்லை.

பிரச்சனை  இல்லாத மனிதன் உலகில் இல்லை. உண்மையில் நமது மிக பெரிய பிரச்சனை நம்மை தாங்க  தோள்  இல்லையே  என்பது தான் 


பேச துவங்குங்கள் : 


         நிறைய நண்பர்களை சேகரியுங்கள். அவர்களுடன் மனம் விட்டு பழகுங்கள். அவர்கள் உன் உறவினர்களாகவோ, உறவாய் இல்லாதவர்களாகவோ, இவ்வளவு ஏன் உன் தாயாகக் கூட  இருக்கலாம். அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்

       நம்மில் பல பேருக்கு எல்லாவற்றிக்கும்  கோவம் கொள்ளும் எண்ணம் வந்து விட்டது . கோவம் மட்டும் அல்ல EGO, வெறுப்பு, சகிப்பு தன்மை இல்லாதது, விட்டுக்கொடுக்காதது என பல நோய்க்கு அடிமையாகி உள்ளோம். அதை விடுத்து உண்மையாய் பழகி உயர்வான மகிழ்வை  பெற முயற்ச்சி சேய்வோம். நம் தனிமை தரும் பெரும் துன்பத்தை வென்று விடலாம் . 

 

         எல்லாரும் பொய்யாக இருக்கிறார்கள் என்று எண்ணம் உங்களுக்கு தோன்றினால்.... அப்படி என்றால் நீங்களே எல்லா நேரமும் உண்மையாக  இருந்தீர்களா என்று யோசித்து பாருங்கள். அப்படி யோசிக்கையில் சிலரிடம் மன்னிப்பு கேட்க தோன்றும். தாராளமாக மன்னிப்பு கேளுங்கள். நாம்  தனிமை வலியில்  அழுவதை விட மன்னிப்புடன் கூடிய சிரிப்பு எவ்வளவோ மேல். 

"உனக்காக கவலை பட ஒருவர் இருந்தால் உலகையே நீ வெல்லலாம்" 

 

உண்மையில் தனிமை நல்லதே: 


        அடுத்தவன் துக்கத்திற்கு ஆறுதலாக  இருந்து பார். அந்த ஆறுதலே  அவனை வெற்றியாளனாக மாற்றும். அவனின் கண்ணுக்கு நீ ஆண்டவனை தெரிவாய்.  அடுத்தவனையே மாற்றும் திறமை கொண்ட உனக்கு உன் மனமே ஆறுதலாக  மாறும். எல்லா கஷ்டங்களையும் நீயாக  எதிர்கொள்வாய்..

       எல்லாருடனும் இணைந்து வாழ், தவறுக்கு மன்னிப்பு கேள், விட்டுக்கொடுக்க  பழகி கொள், வீண் சிந்தனை விடு இதையெல்லாம் செய்த பின் உன்னை சுற்றி இருக்கும் கஷ்டம் உனக்கு தூசியாக தோன்றும்.

      இப்பொழுது நீ தனிமையாக  அமர்ந்து உன்  நினைவை ஓட்டி  பார்  உன் மனதில் நிம்மதி எனும் பெரும் மூச்சே இருக்கும். உண்மையில் நல்லவைகளை பற்றியும் நல்லதை பற்றியும் யோசிக்கும் தனிமை மிகவும் நல்லது...


                                                                                            -கவிநேயன் 




I'm Also Baby

             நானும் ஓர் குழந்தை   கற்பனையில் மட்டும் கிடைத்த காதல் எனும் உணர்வை பெற கட்டியவள் என்றொருத்தி வந்தாள். கட்டிலறை இன்பம்  கண்டு கா...