ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

I'm Also Baby

             நானும் ஓர் குழந்தை  



கற்பனையில் மட்டும் கிடைத்த காதல் எனும் உணர்வை பெற கட்டியவள் என்றொருத்தி வந்தாள். கட்டிலறை இன்பம்  கண்டு காதலில் திளைக்கும் கற்பனை மீறிய உணர்வில் மிதந்து கொண்டிருக்கும் வேளையில் கடவுள் வரம் தந்ததாய் உணர்ந்த ஓர் நிகழ்வை பற்றிய தொகுப்பு 


வேலை முடிந்து வரும் வேளையில் என்னவள் எனை பார்த்து வெட்கம் எனும் பூக்களை உதிர்த்தாள். முதன் முதலாக அவளை பார்த்த பொது அவள் பெற்ற வெட்கத்தைவிட மிகவும் அழகாகவும், ஆழமாகவும் இருந்தது. அவள் கண்ணே ஆயிரம் கதை சொல்ல அன்பானவளை பார்த்து என்ன என்பதை போல தலையாட்டினேன். கையில் ஏதோ மறைத்தவளாய் என் அருகில் வந்தவள்... "மாமா, உன்னை புது உறவு கூறி அழைக்க மகிழ்வான ஓர் உறவு வருகிறது" என்றாள். புரிந்தும் புரியாதவனுமாக அவளையே பார்த்து நின்றேன் 

 

கண்மணி கையில் இருந்த Pregnancy Test Kit ல் இருந்த 2 கோட்டினை நான் கண்டவுடன்.. சிறகு இல்லாத பறவையை போல் சிறகடிக்க முயன்றேன். என்னுடைய உயிரானவள் வயிற்றில் எனக்கான உயிர் வளர்வதை எண்ணி எண்ணற்ற எண்ணம் கொண்டேன். மகிழ்வை தவிர மனதில் வேறொன்றும் இல்லை.


இமயம் எட்டிப்பிடித்த சாதனை புரிந்த உணர்வு, என்னைப் பார்த்து ஆனந்த கண்ணீருடன் நின்ற என் மூத்த பிள்ளையை தழுவி தலையில் முத்தமிட்டு கர்ப்பமாக இருப்பது நீயல்ல நாம் என்று கூறினேன்.


     

என் குழந்தையின் தாயை என்னுடைய தாயை போல கவனித்து காலங்களை கடந்து என் பிள்ளை வரவிற்காக காத்திருந்தேன். காலையில் நடைப்பயிற்சி, மாலையில் வெந்நீர் ஒத்தடம் என மணந்தவளுக்கு மெல்ல மெல்ல பிரசவ வலியை தாங்கும் தைரியம் கொடுத்தேன். 



அவள் உறங்க என் உறக்கம் தொலைத்து அவள் முகம்காணும் மகிழ்வை தினமும் அனுபவித்தேன்.சிலநேரம் என்பிள்ளை உதைப்பதாக கூறி எனை தொட்டு பார்க்க சொல்லும் அந்த நொடி கற்பனையில் கூட காணாத இன்பம் அதை கூற உண்மையில் வார்த்தை ஒன்று உலகில் இல்லை.


பத்து மாதம் என் கண்ணில் சுமந்தவளை கதறும் நிலை காணும் பொழுது கடவுளே உனக்கு மனதில்லையா எனும் கேள்வி மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் எழுந்தது. பெண்கள் மட்டும் இந்த வலியை பெற வேண்டுமா?, நானும் ஏற்கிறேன் என் உயிரின் வலியை என்று இயற்கையை மீறி யோசித்தேன்.



கட்டியவள் கதறும் ஒலிகேட்டு மருத்துவமனை வெளியில் நின்று நான், இனி கட்டிலறை சுகம் கூட வேண்டாம் கடவுளே என் உயிரானவள் உடல் துடிக்காமல் பார்த்துகொள்ளடா என்று வேண்டினேன். குழந்தை பிறந்த ஒலி கேட்டு மனம் கொண்ட நிம்மதி யாரும் அறியா ஒன்று. மகனோ, மகளோ காண தோணவில்லை எனக்கு... காரணம் உள்ளே உள்ள என் மூத்த பிள்ளையை பார்க்கவே என் மனம் ஏங்கியது. " தாயும் சேயும் நலம்" என செவிலியர் சொன்ன வார்த்தையே என் உள்ளம் பெற்ற உயிர் வலியை குறைக்க  மருந்தாய் அமைந்தது.




கடவுள் தந்த வரமாய் வந்த என் பிள்ளையை என் முன்னே கொண்டு வந்த போது 200 கிலோ தூக்கும் என்னால் 2 கிலோ என் பிள்ளையை தூக்க மனத் தைரியம் இன்றி துடித்தேன். அந்த பிள்ளைதனை கையில் சுமந்து பிஞ்சு விரல்  என் நெஞ்சை தொடும் பொழுது.......

 "நானும் ஓர் குழந்தை' எனும் எண்ணம் என் மனதை நிறைத்தது.






                                                                                                   -கவிநேயன் 



4 கருத்துகள்:

Unknown சொன்னது…

தண்ணீர் குளமாகியது கண்கள்

Unknown சொன்னது…

மெய் சிலிர்க்க வைத்த உறவில் வலிகள் தெரியாது, காதல் மட்டுமே தெரியும்

Kavineyan சொன்னது…

தொடர்ந்து படிக்கவும். நன்றி

Kavineyan சொன்னது…

உண்மைதான். தொடர்ந்து படிக்கவும். நன்றி

I'm Also Baby

             நானும் ஓர் குழந்தை   கற்பனையில் மட்டும் கிடைத்த காதல் எனும் உணர்வை பெற கட்டியவள் என்றொருத்தி வந்தாள். கட்டிலறை இன்பம்  கண்டு கா...